தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்பொழுது தனது சொந்த தயாரிப்பில் பிரம்மாண்டமாக நடித்து முடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குடும்ப உணர்வுகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த இந்த மெகா திரைப்படம் வருகிற ஜூன் 19-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு சுவாரசியமான கேள்விகளுக்குச் சமந்தா ஓப்பனாகப் பதிலளித்துள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?” என்று கேட்ட கேள்விக்குச் சமந்தா, “ஹேட்டர்ஸா? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன?” என்று மிகவும் நக்கலாகவும் நகைச்சுவையாகவும் பதிலடி கொடுத்து நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி, முதலில் நடிகை சாய் பல்லவியை மனதில் வைத்துதான் இந்த அதிரடிக் கதையை உருவாக்கினார் என்கிற ரகசியத்தை உடைத்துள்ளார்.
சாய் பல்லவி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால், பின்னர் அந்த கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தன்னிடம் கூறப்பட்டதாகவும், கதை மிகவும் பிடித்துப்போனதால் தானே தயாரித்து நடிக்கச் சம்மதித்ததாகவும் சமந்தா ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.
