பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அமீர்கான், தனது தனிப்பட்ட வாழ்க்கையின் புதிய திருப்பம் காரணமாக மீண்டும் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். 61 வயதான அமீர்கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் விவாகரத்து பெற்ற நிலையில், தற்பொழுது பெங்களூருவைச் சேர்ந்த தனது காதலியான கவுரி ஸ்ப்ராட் என்பவரை 3-வதாகத் திருமணம் செய்ய உள்ளதாகப் பாலிவுட் வட்டாரங்களில் இருந்து அதிரடித் தகவல்கள் கசிந்துள்ளன.
சமீபகாலமாகப் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் ஜோடியாகப் பங்கேற்று வந்ததைத் தொடர்ந்து பரவிய காதல் வதந்திகள், தற்பொழுது திருமணச் செய்தியாக உருவெடுத்துள்ளன.லண்டனில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனைப் படிப்பை முடித்துவிட்டு மும்பையில் அழகு நிலையம் நடத்தி வரும் கவுரி ஸ்ப்ராட், அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 7 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வரும் ஜூலை 5-ஆம் தேதி இவர்களது திருமணம் எவ்வித ஆடம்பரமும் இன்றி மிக எளிமையான முறையில் பதிவுத் திருமணமாக நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.
இத்திருமணத்தில் சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படும் நிலையில், 60 வயதைக் கடந்த பின் நடக்கும் இத்திருமணத்திற்கு எழுந்த சமூக வலைத்தள விமர்சனங்களுக்குப் பாலிவுட் மூத்த நடிகை ராக்கி குல்சார் கடும் பதிலடி கொடுத்து அமீர்கானுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
