”திமுகவிடம் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும் மற்ற கூட்டணிக் கட்சிகள், எங்களைக் காட்டி சீட் கேட்க வேண்டாம்” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மிகத் தெளிவான, அதே சமயம் அதிரடியான கருத்தை முன்வைத்துள்ளார். 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற கட்சிகள் பேரம் பேசுவது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் என்பது ஒரு மிகப்பெரிய தேசிய இயக்கம். அதன் வலிமைக்கு ஏற்பவே கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. மற்ற கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதைக் கொடுக்க முதலமைச்சருக்கும் தாராள மனது இருக்கிறது. ஆனால், எங்களோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம்” என அதிரடியாகக் கூறியுள்ளார். இந்தக் கருத்து தற்போது கூட்டணிக் கட்சிகளிடையே புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், சீட் பங்கீட்டில் காங்கிரஸின் கறார் தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
