“கல்விக்கடன் இனி கிடையாது, மதுக்கடைகள் இனி இருக்காது” என 2026 தேர்தல் களத்தை அதிரவைக்கும் வாக்குறுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். மாணவர்களின் சுமைக் குறைக்க அவர்களின் கல்விக்கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்ற மிகப்பெரிய அறிவிப்பைத் தொடர்ந்து, ஓராண்டிற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். இது மதுக்கடைகளை நம்பி வருமானம் ஈட்டும் தற்போதைய அரசு நடைமுறைக்கு முற்றிலும் எதிரான ஒரு அதிரடி மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

​மேலும், இடஒதுக்கீட்டு முறையில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், ஆற்றுநீரைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக, 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீமானின் இந்த ‘புரட்சிகரமான’ தேர்தல் அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.