தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்யுமாறு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பணபலம் மிக்க அரசியல் கட்சிகள் தேர்தலை ஒரு முதலீடாகக் கருதி கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து ஜனநாயகத்தைச் சீரழிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அத்தகைய ‘பணநாயகத்தை’ வீழ்த்தி, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டத் துடிக்கும் தங்கள் கட்சிக்கு, மக்கள் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். லஞ்சம், ஊழல் மற்றும் மதுவற்ற ஒரு புதிய தேசத்தைப் படைக்கும் கனவோடு களம் காணும் தங்கள் பிள்ளைகளின் கரங்களை வலுப்படுத்துமாறு சீமான் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் களத்தில் மற்ற கட்சிகள் வாக்குகளுக்குப் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் நிலையில், மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் தங்களுக்கு மக்கள் தரும் நிதியே பெரும் பலம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இம்முறையும் திரள்நிதி மூலம் மக்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், அதற்கான இணையதள முகவரியையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
