ஐபிஎல் 2026 தொடருக்கான வர்ணனையாளர் குழுவிலிருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா மற்றும் இர்பான் பதான் ஆகியோரை பிசிசிஐ நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இவர்கள் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்ததே இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இது குறிப்பாக, சாம்சனுக்கு ஆதரவாகப் பேச இவர்கள் பணம் பெற்றதாகச் சில பிசிசிஐ நிர்வாகிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சஞ்சு சாம்சனை ஆதரிப்பதன் மூலம் ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும், வர்ணனையாளர்கள் ஒரு சார்பாகச் செயல்படுவது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் பிசிசிஐ கருதுவதாகத் தெரிகிறது. இருப்பினும், பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாகப் பேசியதற்காகத் திறமையான வர்ணனையாளர்களை நீக்குவது முறையல்ல என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
