ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தங்கா தோலா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதான தர்பாரி முர்மு, அவரது மனைவி மற்றும் 12 வயது மகன் ஆகியோர் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. மறுநாள் காலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்களைக் கண்டு கிராமமே திரண்டது.
தகவலறிந்து வந்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் மூவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்லப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு எதிராக மாந்திரீகப் பூஜைகள் செய்து சூனியம் வைத்ததாகக் கொலையாளிகள் சந்தேகப்பட்டுள்ளனர். அந்த ஆத்திரத்தில்தான் இக்கொலையைச் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், இத்தகைய மூடநம்பிக்கையால் நிகழ்ந்த இந்த வன்முறைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
