பெங்களூருவின் குட்டஹள்ளி மேம்பால நுழைவாயில் அருகே நடந்த ஒரு சாலை விபத்து, தற்போது இணையதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மெதுவான போக்குவரத்து நெரிசலில் சென்றபோது, ஒரு வாடகை கார் (Cab) முன்னால் சென்ற காரின் மீது லேசாக மோதியுள்ளது. இதனை சாதாரணமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய நிலையில், காரில் இருந்த வாலிபர் ஆத்திரமடைந்து இறங்கி வந்து டாக்ஸி டிரைவரைத் தாக்கத் தொடங்கினார். அவருடன் இருந்த பெண் தடுத்தும் கேட்காத அந்த நபர், இடையில் சமாதானம் செய்ய வந்த தனது சொந்தத் தாயையே ஆவேசமாகப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டுள்ளார். அந்த முதியவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தும் கூட, அந்த நபர் தொடர்ந்து டிரைவரை ஓங்கி அறைந்தது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​இந்தக் கொடுமையான வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலாகி, அந்த நபருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. “தவறு யாராக இருந்தாலும், பெற்ற தாயையே நடுரோட்டில் தள்ளிவிட்டு வன்முறையில் ஈடுபடுவது என்ன மாதிரியான நாகரிகம்?” எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்த நிலையில், பெங்களூரு மாநகர காவல்துறை தற்போது தலையிட்டுள்ளது. “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனப் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ‘சாலை ரௌடிகள்’ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.