இந்திய ரயில்களில் இருக்கைக்காகப் பயணிகள் மோதிக்கொள்வது ஒன்றும் புதிய விஷயமல்ல, ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரயிலின் பொதுப் பெட்டியில் (General Coach) கடும் கூட்ட நெரிசலுக்கு இடையே, இருக்கையில் அமர்வது தொடர்பாக இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது. அது சில நொடிகளிலேயே கைகலப்பாக மாறியது. இதில் வெள்ளை நிற சுடிதார் அணிந்த பெண், புடவை அணிந்திருந்த மற்றொரு பெண்ணை இருக்கையில் இருந்து பலவந்தமாக இழுத்துக் கீழே தள்ளிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமித்த காட்சி பார்ப்போரை உறைய வைத்துள்ளது.

​இந்தச் சண்டை இத்துடன் நின்றுவிடவில்லை; இடையில் சமாதானம் செய்ய வந்த ஒரு சிறுமியையும் அந்தப் பெண் தாக்க முயன்றார். உச்சக்கட்டமாக, மேல் இருக்கையில் (Upper Berth) அமர்ந்திருந்த ஒரு இளைஞரின் சட்டைக் காலரைப் பிடித்துக் கீழே இழுத்து அவரோடும் அந்தப் பெண் மல்யுத்தத்தில் ஈடுபட்டது சக பயணிகளைத் திகைக்க வைத்துள்ளது. சுமார் 1 நிமிடம் 45 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ, எக்ஸ் (X) தளத்தில் ‘அன்சாரி அஜ்ஜு’ என்பவரால் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வருகிறது. “இது ரயில் பெட்டி போலத் தெரியவில்லை, போர்க்களம் போல இருக்கிறது” என நெட்டிசன்கள் இந்தச் சம்பவத்தைக் கிண்டல் செய்தும், ரயில்களின் இடநெருக்கடி குறித்துக் கவலை தெரிவித்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.