மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நோயாளி ஒருவர், தனது பில் தொகையில் நடந்த மிகப்பெரிய மோசடியை இணையத்தில் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் நடந்த ஒரு சிறிய சிகிச்சைக்குப் பிறகு, காப்பீடு (Insurance) போக அவருக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் பில் வந்துள்ளது. அதைக் கட்டத் தயாரானவரிடம், சக ஊழியர் ஒருவர் ‘Itemised Bill’ எனப்படும் விரிவான கட்டணப் பட்டியலைக் கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மருத்துவமனை வழங்கிய 6 பக்க அறிக்கையைச் சோதித்தபோது, அவருக்குச் செய்யப்படாத மயக்க மருந்து ஆலோசனைக்காக (Anesthesia Consultation) மட்டும் ரூ. 31,430 வசூலிக்கப்பட்டதும், ஒரே மருத்துவக் கருவிக்கு இரண்டு முறை கட்டணம் போடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
asked for an itemized hospital bill on a whim and found out they charged me for stuff that literally never happened
byu/LongjumpingOffice432 inpovertyfinance
உடனடியாகப் புகார் அளித்த 2 வாரங்களில், அந்தத் தவறான கட்டணங்கள் நீக்கப்பட்டு 1 லட்சம் ரூபாய் பில், 57,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. “மருத்துவமனைகள் மக்கள் பில்லைச் சோதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இது போன்ற ‘பில்லிங் எர்ரர்’களைத் திட்டமிட்டே செய்கின்றன” என அந்த நோயாளி எச்சரித்துள்ளார். இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, “இவை தவறு அல்ல, திட்டமிட்ட பகல் கொள்ளை; இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இதைக் கண்டு கொள்வதில்லை” என நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். மருத்துவமனை பில் கட்டும் முன், ஒவ்வொரு பைசாவுக்கும் விரிவான பட்டியல் கேட்பது உங்கள் பணத்தைக் காப்பாற்றும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
