தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. இன்று மாலை தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பணிகளைத் அதிரடியாகத் துரிதப்படுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் 4 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அவர் இன்று அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் அதிமுகவின் சீனியர் தலைவர்களான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி மற்றும் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுகவின் முக்கியப் பீரங்கிகளாகக் கருதப்படும் இந்த நான்கு பேரும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து இனி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டிற்குத் தயாராகும் என்பதால், அதற்கு முன்னரே இந்தக் குழுவை அமைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அதிமுக ஒரு படி முன்னால் சென்றுள்ளது. இந்தக் குழுவின் அறிவிப்பால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளதுடன், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இனி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
