தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் புதிய சலசலப்பு வெடிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகனுக்கு வரும் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட உள்ளதாகவும், அதிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று திமுக கறார் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து வந்த வேல்முருகனுக்கு திமுகவின் இந்த முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியில் இருக்கும் அவர், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து 170-க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்து நிக்கத் திட்டமிட்டு வருவது, கூட்டணியில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் போன்ற மற்ற கட்சிகளிடையேயும் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
