தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், டெல்லியில் பாஜக தலைமை நடிகர் விஜய்யுடன் ரகசிய கூட்டணி பேரம் பேசி வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன.

என்டிஏ கூட்டணியில் இணைந்தால், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றும், விஜயகாந்த் பாணியில் விஜய்யை எதிர்க்கட்சித் தலைவராக்கலாம் என்றும் பாஜக தரப்பில் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி கடும் தயக்கம் காட்டி வருகிறார். விஜய் உள்ளே வந்தால் துணை முதல்வர் பதவி கேட்கக்கூடும், 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதால் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது போன்ற 3 முக்கிய காரணங்களே எடப்பாடியின் இந்த ‘நோ’வுக்கு பின்னணியாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரம், பாஜகவுடன் இணைந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற சாதகமான அம்சம் இருந்தாலும், ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ என்ற கொள்கையைத் தூக்கிப்பிடிக்கும் விஜய்க்கு இது ‘அரசியல் அடிமை’ என்ற முத்திரையை குத்திவிடுமோ என்ற அச்சமும் தவெக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.