தமிழகம் உட்பட கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முறைப்படி அறிவிக்க உள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் முதல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்தல் அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் போன்ற முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.