உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர் விடுதி படிக்கட்டுகளில், 19 வயது மாணவி ஒருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த அந்த மாணவி, சம்பவத்தன்று மதிய உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு அந்த விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு சுமார் இரண்டு மணி நேரம் அவர் இருந்துள்ளதாகத் தெரிகிறது. மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் சில மருந்து அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. மாணவியின் மொபைல் போனை பறிமுதல் செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் கால் ரெக்கார்டுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் சில மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.