பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே வெட்கித் தலைனியச் செய்யும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் பாஸ்வான் (40) என்ற மாம்பழ வியாபாரி, தனது மனைவி சந்த்ரா தேவியுடன் பெங்காலில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு பிக்-அப் வாகனத்தில் முசாபர்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது ஹனுமான் நகர் சவுக் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர்.

வாகனம் கவிழ்ந்ததில் டன் கணக்கிலான மாம்பழங்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன. விபத்தைக் கண்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தம்பதியை மீட்க முயற்சி செய்யாமல், சாலையில் சிதறிக் கிடந்த மாம்பழங்களை போட்டிப் போட்டுக்கொண்டு கொள்ளையடிப்பதில் தீவிரமாக இருந்தனர். காயமடைந்த தம்பதி வலியால் அலறியபோதும், ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் பைகளில் மாம்பழங்களை அள்ளிச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், சிகிச்சை பலனின்றி வியாபாரி அஜய் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.