ரயில்வே முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுப்பதற்காகப் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலையில், கவுண்ட்டருக்குள் இருக்கும் அதிகாரிகள் புரோக்கர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேடாக டிக்கெட் வழங்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘X’ தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், பயணி ஒருவர் தான் நீண்ட நேரமாக லைனில் நிற்பதாகவும், ஆனால் தனக்கு முன்னால் புரோக்கர்களின் படிவங்களை வாங்கி அதிகாரிகள் ரகசியமாக டிக்கெட் போடுவதாகவும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

கவுண்ட்டருக்குள் ஒரு பெண் ஊழியர் அருகில் நின்று கொண்டு இந்தத் தில்லுமுல்லு ஆட்டத்தை அரங்கேற்றும் காட்சிகள் பார்ப்போரை அதிர வைத்துள்ளது. ​”டிக்கெட் கவுண்டரில் நடக்கும் இந்த லஞ்சப் புகாரைத் தடுக்க ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாதாரண மக்களுக்குத் தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்கும்” என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வைரல் வீடியோவிற்கு, நார்த் வெஸ்டர்ன் ரயில்வே நிர்வாகம் உடனடியாகப் பதிலளித்துள்ளதுடன், “சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தின் பெயரைப் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.