உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராகப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றில் சீன நடிகை ஒருவர் கையில் பிளாஸ்டிக் கவருடன் தோன்றியது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சீனாவின் முன்னணி நடிகையான ஜாங் ஜிங்யி (Zhang Jingyi), சமீபத்தில் நடைபெற்ற பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை, ஆபரணங்களை விட, அவரது கையில் இருந்த மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பொதுவாக காய்கறிகள் வாங்கப் பயன்படுத்தப்படும் அந்தச் சாதாரண பிளாஸ்டிக் கவர், ஏதோ ஒரு பிரபல ‘லக்சூரி பிராண்ட்’ தயாரித்த விலையுயர்ந்த கைப்பை (Handbag) என்றும், அதன் விலை சுமார் ரூ.1.65 லட்சம் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் பதிவிடத் தொடங்கினர். இது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.

இருப்பினும், அந்தப் பை எந்த ஒரு ஆடம்பர பிராண்ட் தயாரிப்பும் அல்ல; அது உண்மையான சாதாரண பிளாஸ்டிக் கவர் என்பது பின்னர் உறுதியானது. நடிகை ஜாங் ஜிங்யி இத்தகைய செயலில் ஈடுபட்டதற்குப் பின்னால் ஒரு உருக்கமான காரணம் ஒளிந்துள்ளதும் தெரியவந்தது.

அவர் நடித்துள்ள ‘தி ஒன்’ (The One) திரைப்படத்தின் விளம்பரத்திற்காகவே அவர் அந்தப் பையை ஏந்தி வந்துள்ளார். அந்தத் திரைப்படத்தில் அவர் பேசும் திறன் மற்றும் கேட்கும் திறன் அற்ற பெற்றோரின் மகளாக நடித்துள்ளார்.

படத்தில், வாய் பேச முடியாத தனது பெற்றோருடன் தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான ஒரு முக்கியக் குறியீடாக (Symbol) இந்த மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் மீதான கவனத்தை ஈர்க்கவும், படத்தின் உணர்வுப்பூர்வமான கதையைச் சொல்லவும் அவர் கையாண்ட இந்த வினோதமான முயற்சி, தற்போது சினிமா ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.