ஆயிரம் காலத்து அதிசயம்: ஃப்ரிட்ஜ் இல்லாமலேயே 6 மாதங்கள் பழங்களைப் பாதுகாக்கும் ‘மண்’ ரகசியம்!
ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் வசிக்கும் மக்கள், நவீனத் தொழில்நுட்பங்கள் தோன்றுவதற்கு முன்பே, பழங்களைப் பல மாதங்கள் கெடாமல் பாதுகாக்கும் ஒரு விந்தையான கலையைக் கையாண்டு வருகின்றனர். ‘கங்கனா’ (Kangana) என்று அழைக்கப்படும் இந்த மண் பாத்திரங்கள், ஒரு சிறிய மண் கிண்ணத்தைப் போல வடிவமைக்கப்படுகின்றன. கோடை காலத்தில் களிமண்ணுடன் வைக்கோல் கலந்து வெயிலில் காயவைத்து உருவாக்கப்படும் இந்த பாத்திரங்களுக்குள், அக்டோபர் மாதத்தில் திராட்சைகளைப் போட்டு காற்றுப் புகாதபடி களிமண்ணால் சீல் வைத்துவிடுகிறார்கள். இப்படிப் பாதுகாப்பதன் மூலம், மார்ச் மாதம் வரை அந்தத் திராட்சைகள் பறித்தது போலவே அவ்வளவு ‘பிரஷ்’ ஆகவும், சாறு நிறைந்தும் இருக்கிறது.
Afghans preserve grapes by sealing them in mud containers for months. When opened, the grapes remain fresh, sweet, and full of flavor.
— Massimo (@Rainmaker1973) March 14, 2026
இந்த அதிசய முறையைப் பயன்படுத்தி, மும்தாஜ் மற்றும் வசீர் கான் போன்ற வியாபாரிகள் ஆயிரக்கணக்கான கிலோ திராட்சைகளை விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். குறிப்பாக, தடிமனான தோல் கொண்ட ‘தைஃபி’ (Taifi) ரகத் திராட்சைகள் இந்த கங்கனா முறைக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றன. குளிர்காலத்தில் திராட்சை கிடைக்காத நேரத்திலும், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து வந்து மக்கள் இந்தத் திராட்சைகளை வாங்கிச் செல்கின்றனர். இயற்கையோடு இணைந்த இந்தத் தொன்மையான முறையானது, நவீன காலத்து குளிரூட்டப்பட்ட கிடங்குகளை விடவும் பழங்களின் சுவையை அப்படியே தக்கவைப்பதாக ஆய்வாளர்கள் வியந்து பாராட்டுகின்றனர்.
