மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எங்கே இருக்கிறார் என்பது இப்போது உலக நாடுகளிடையே மிகப்பெரிய மர்மமாக மாறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து ‘கோமா’ நிலையில் இருப்பதாகப் பேசப்படும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் 80 கோடி ரூபாய்) பரிசு அறிவித்துள்ளது. “எது வேண்டுமானாலும் ஆகட்டும், ஈரான் சரணடையாது” எனச் செய்தி வாசிப்பாளர் மூலம் அறிக்கை விட்ட கமேனி, இன்று வரை பொதுவெளியில் தோன்றாதது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

​ஆனால், அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் மொஜ்தபா கமேனியைப் பாதுகாத்து வருவது ‘நோபோ’ (NOPO) எனப்படும் ஈரானின் மிக ரகசியமான மற்றும் ஆபத்தான சிறப்புப் படைப்பிரிவு ஆகும். 1991-ல் உருவாக்கப்பட்ட இந்தப் படையினர், ஈரானின் வழக்கமான ராணுவம் அல்லது ஐஆர்ஜிசி (IRGC) வீரர்களை விடவும் பலமடங்கு போர் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள். கருப்புச் சீருடை அணிந்து மின்னல் வேகத்தில் செயல்படும் இவர்களது ஒரே வேலை, உச்ச தலைவரை எதிரிகளின் கையில் சிக்காமல் பாதுகாப்பது மட்டுமே. அமெரிக்காவால் ஏற்கனவே தடை செய்யப்பட்ட இந்தப் படை, இப்போது மொஜ்தபா கமேனியைச் சுற்றி இரும்புச் சுவர் போல நின்று பாதுகாத்து வருகிறது. அமெரிக்காவின் ‘நீதிக்கான வெகுமதி’ திட்டமும், ஈரானின் ‘நோபோ’ பாதுகாப்பும் நேருக்கு நேர் மோதும் இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.