பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பெரிய விவாதமாக மாறியுள்ளது. மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுவைத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது அதிரடியான ஒரு கருத்தை முன்வைத்த நீதிபதி, “மாதவிடாய் விடுமுறையைச் சட்டமாகக் கட்டாயமாக்கினால், நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு எடுக்கவே தயங்குவார்கள்!” எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.

​சட்டம் என்ற பெயரில் இதை கட்டாயமாக்கும்போது, அது பெண்களின் தொழில் வாழ்க்கையை (Career) முடக்கிவிடும் என்றும், நிறுவன முதலாளிகள் ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் சூழலை உருவாக்கிவிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார். “பெண்கள் தங்களை ஆண்களை விடக் குறைந்தவர்கள் என்று நினைக்கும் நிலையை இந்தச் சட்டம் உருவாக்கிவிடும்” என்று குறிப்பிட்ட அவர், சில தனியார் நிறுவனங்கள் தானாக முன்வந்து விடுமுறை அளிப்பது வேறு, ஆனால் சட்டம் போடுவது பெண்களின் முன்னேற்றத்திற்கே தடையாக அமையும் என்றார். ஏற்கனவே சானிட்டரி நாப்கின்கள் மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், விடுமுறை விஷயத்தில் நீதிமன்றம் காட்டிய இந்த ‘சிவப்பு கொடி’ இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.