இந்தியாவில் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் தடையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டது. “ரத்தம் பெறுபவர்களின் பாதுகாப்பே முக்கியம்.. தனிப்பட்ட உரிமை கிடையாது!” என்ற ரீதியில் மத்திய அரசு முன்வைத்த வாதங்கள் இன்று வெற்றி பெற்றுள்ளன.

​தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தபோது, “ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரத்தத்தில் 1 சதவீதத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், அதை அனுமதிக்க முடியாது!” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. LGBTQ+ பிரிவினர் ‘அதிக அபாயகரமான’ (High Risk) பிரிவில் வருவதாகவும், பாதுகாப்பான ரத்தப் பரிமாற்றத்தை உறுதி செய்ய இந்தத் தடை அவசியம் என்றும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான ஏ.எஸ்.ஜி ஐஸ்வர்யா பாட்டி வாதிட்டார். நவீன சோதனைகள் வந்த பிறகும் இப்படி ஒரு பாரபட்சமான தடை நீடிப்பது தங்களை அவமதிப்பதாகப் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டாலும், பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்தத் தடையை நீட்டிக்க அனுமதித்துள்ளது.