தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழலால் இறக்குமதி தடைபட்டு, வணிக சிலிண்டர்களின் விநியோகம் சீரற்ற நிலையில் உள்ளது.

இதன் விளைவாக, சென்னையில் உள்ள பல ஹோட்டல்களில் தோசை, சப்பாத்தி போன்ற அதிக எரிவாயு தேவைப்படும் உணவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பாரம்பரிய விறகு அடுப்புகளை நோக்கி உணவக உரிமையாளர்கள் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் எரிவாயு தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, சிலிண்டர்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால் தேநீர் மற்றும் காபி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, பார்சல் டீ மற்றும் காபி விற்பனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சில தனியார் விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் காலை நேர பானங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை நீடித்தால் பல சிறிய உணவகங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதால், அரசு உடனடியாகத் தலையிட்டு தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.