திருநெல்வேலியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மூன்று சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சேகர் (40). இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு, மூன்று சிறுமிகளுக்கு ஒரே நேரத்தில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து மேலப்பாளையம் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆனந்த சேகரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஆனந்த சேகருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்