தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கும் வகையில், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய மற்றும் கம்பீரமான விழாவில், அவர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு, புதிய ஆளுநருக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள்
தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கேரள மாநிலத்தின் ஆளுநராகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார். நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படாத வண்ணம், ஆளுநர் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக தமிழகத்தில் ஆளுநராக இருந்த ஆர்என் ரவி சற்றுமுன் மேற்குவங்க மாநிலத்தில் ஆளுநராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
