மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தின் பவனி தாலுகாவில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவர் தன்னை யாரோ கடத்தியதாகத் நாடகமாடிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் அந்த மாணவன் கரும்பலகையில் தவறான சொற்களை எழுதியுள்ளார்.
இது குறித்து ஆசிரியர்கள் அவரது பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அழைத்ததால் தந்தையிடம் அடி கிடைக்கும் என்ற அச்சத்தில் அந்த மாணவன் தனது கடத்தல் நாடகத்தைத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியை நாடியபோது அது தவறை ஒப்புக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
ஆனால் தண்டனைக்கு அஞ்சிய அந்த மாணவன் இணையதளத்தில் உள்ள குற்றச் சம்பவக் கதைகளைப் பார்த்து தனது கடத்தல் திட்டத்தைத் தீட்டியுள்ளார். தன்னை மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டிக் கடத்தியதாகவும் பின்னர் மயக்க மருந்து கொடுத்து நாக்பூர் நோக்கி அழைத்துச் சென்றபோது தான் தப்பி வந்ததாகவும் தனது தாயிடம் அந்த மாணவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவன் வீடு திரும்பியவுடன் அவரிடம் விசாரித்தபோது அவரது பேச்சில் முரண்பாடுகள் இருப்பதை உணர்ந்தனர். உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இறுதியில் பெற்றோரின் அன்பான விசாரணையில் பயத்தின் காரணமாகவே தான் இத்தகைய நாடகத்தை ஆடியதாக அந்த மாணவன் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
