காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரியானா மாநிலம் சோனிபெட் மாவட்டத்தில் உள்ள மடினா கிராமத்திற்குச் சென்று, ஒரு விவசாயியின் குடும்பத் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். கடந்த 2023-ம் ஆண்டு இதே கிராமத்திற்குச் சென்றிருந்த போது, விவசாயி சஞ்சய் மாலிக் என்பவரின் விளைநிலத்தில் இறங்கி ராகுல் காந்தி நாற்று நட்டார்.
அப்போது சஞ்சய் மாலிக், தனது மகள் தனுவின் திருமணத்திற்கு ராகுல் காந்தி நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த அழைப்பினை ஏற்று, தற்போது தனுவின் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை அவர் வாழ்த்தினார்.
மேலும் ராகுல் காந்தியின் இந்த திடீர் வருகை அந்த கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. சாதாரண விவசாய குடும்பத்தின் மீது அவர் காட்டிய அக்கறையையும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விதமாகத் திருமணத்திற்கு வந்ததையும் மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இந்நிலையில் ராகுல் காந்தியைக் காண்பதற்காகச் சஞ்சய் மாலிக்கின் வீட்டின் முன் ஏராளமான கிராம மக்கள் திரண்டனர். எளிய மக்களுடன் அவர் கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.
