நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் வருகை குறித்துத் தான் எந்தவிதமான விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான விவகாரங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இதற்கிடையே, விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்ததாகச் சில தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவின.

இந்தத் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ அல்லது அவரது அரசியல் பிரவேசம் குறித்தோ நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவரை ஒரு மரியாதையான, அமைதியான மற்றும் மென்மையான குணங்கொண்ட சக கலைஞராகவே நான் அறிவேன். குறிப்பாக, அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றார்.

மேலும், தனது பேச்சுத் தவறாகச் சித்தரிக்கப்பட்டதற்குக் காரணம் குறித்து அவர் கூறுகையில், “சமீபத்தில் ஒரு மேடையில் நான் பேசிய சில கருத்துகள், சூழல் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

தற்போதுள்ள அரசியல் சூழல் மற்றும் விஜய்யின் தனிப்பட்ட விவகாரங்களோடு எனது பேச்சைச் சம்பந்தப்படுத்தித் தேவையில்லாமல் பெரிதாக்குகின்றனர். இது தேர்தல் காலம் என்பதால், இத்தகைய வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. எனவே, நிலவி வரும் தவறான புரிதல்களைச் சரி செய்யவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யின் அரசியல் கட்சித் தொடர்பான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த விளக்கம் சமூக வலைதளங்களில் நிலவிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.