அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, தொழிற்சாலை மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர்ச் சூழல் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வருவதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள மாற்று எரிசக்தி ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வலியுறுத்தியுள்ளது.
மேலும் சர்வதேசச் சூழல் சீரடைந்த பின்னரே மீண்டும் விநியோகம் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திடீர் அறிவிப்பால் சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. ஏற்கனவே பல ஹோட்டல்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் சில ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வெரைட்டி தரமுடியவில்லை என நோட்டீஸ் அடித்து ஒட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
