சமூக வலைதளங்களில் ஒரு சில நொடிகள் ஓடும் வீடியோ ஒன்று இப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண் தனது கையில் இருக்கும் குழந்தையை, ஸ்கூட்டியின் சீட்டைத் திறந்து அதன் டிக்ரிக்குள் (Storage space) படுக்க வைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. குழந்தையை உள்ளே வைப்பதற்கு முன்பே, டிக்ரிக்குள் ஒரு தலையணையை தயார் நிலையில் வைத்திருந்த அந்தப் பெண், குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு சீட்டை மூடிவிட்டு ஸ்கூட்டியை ஓட்டத் தொடங்குகிறார்.
இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதா அல்லது நிஜமாகவே நடந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ரீல்ஸ் எடுத்து லைக் வாங்குவதற்காக இப்படியொரு விபரீத செயலில் ஈடுபடுவது முறையா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். “குழந்தையின் உயிருடன் விளையாடும் இந்தப் பெண் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர். காற்றோட்டம் இல்லாத அந்த சிறிய இடத்திற்குள் குழந்தையை அடைத்து வைத்தது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உணராமல் செய்த இந்தச் செயல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
