நேபாளத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக வீரர் ஒருவரை மற்றொரு இளைஞர் கிரிக்கெட் பேட்டால் மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், சக வீரரை மைதானத்தின் நடுவிலேயே போட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான வீரர் தரையில் விழுந்தும் கூட, ஆத்திரம் குறையாத அந்த இளைஞர் பேட்டால் அவரைத் தொடர்ந்து தாக்கியது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த மற்ற இளைஞர்கள் பயந்து ஓடுவதும், யாரும் அவரைத் தடுக்க முன்வராததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களின் உடைகளில் ஹோலி பண்டிகைக்கான வண்ணங்கள் காணப்படுவதால், இது சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காயமடைந்த வீரரின் தற்போதைய நிலை குறித்தோ அல்லது இது தொடர்பாகப் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்தோ இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது இந்த ‘வீடியோ’ இணையவாசிகள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.