காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டத்தையே ஒரு எருமை ஒற்றை ஆளாகத் துவம்சம் செய்து, சிக்கிய சக எருமையை மீட்டெடுத்த காணொலி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் காட்டுயிர் சார்ந்த காணொலிகள் எப்போதும் தனி வரவேற்பைப் பெறும். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள இந்தக் காணொலியில், ஒரு சிங்கக் கூட்டம் எருமை ஒன்றைப் பிடித்து அதன் உயிரைப் பறிக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எருமைத் தன் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடும் வேளையில், அருகில் இருந்த மற்ற எருமைகளும் பயந்து போய் நின்றுகொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில், கூட்டத்தில் இருந்த ஒரு எருமை திடீரென ஆக்ரோஷமடைந்து சிங்கங்களின் மீது நேருக்கு நேர் பாய்ந்தது. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் மிரண்ட சிங்கக் கூட்டம், பிடித்து வைத்திருந்த இரையை விட்டுவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடியது. சிங்கம் மீண்டும் திருப்பித் தாக்க முயன்றாலும், அந்த எருமை பின்வாங்காமல் ஆக்ரோஷமாகச் சிங்கங்களைத் துரத்தியது. எருமையின் இந்தத் துணிச்சலான பதிலடியால், சிக்கியிருந்த எருமை எவ்விதப் பாதிப்புமின்றித் தப்பித்தது.
“A moment of courage shatters all the fear and negativity” pic.twitter.com/cGaWmb67NX
— Wildlife Uncensored (@TheeDarkCircle) March 7, 2026
இந்தக் காணொலி ‘எக்ஸ்’ தளத்தில் @TheeDarkCircle என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளையும், விருப்பங்களையும் பெற்றுள்ள இந்தக் காணொலிக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களின் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“தன்னை விட வலிமையானவனைப் பார்த்து ஒருபோதும் அஞ்சக்கூடாது”, “நம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால் எப்பேர்ப்பட்ட ஆபத்தையும் வெல்லலாம்” எனப் பலரும் எருமையின் வீரத்தைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ‘காட்டின் ராஜா’ என்று அழைக்கப்படும் சிங்கத்தையே மிரள வைத்த எருமையின் இந்தச் செய்கை, இணையத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
