ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்தார்.

அதிமுகவில் ஒரு சாதாரணத் தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் என்றும், ஆனால் திமுகவில் உழைத்த தொண்டர்களுக்குப் பதவி கிடைக்காமல் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், அதிமுக அரசைக் கவிழ்க்க திமுகவுடன் கைகோர்த்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா விரட்டிவிட்டதாகவும், அவர் சென்ற இடம் உருப்படாது என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

உலக மகளிர் தினத்தன்று கூட சிறுமிக்கு எதிரான வன்கொடுமை நடந்திருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் போதைப்பொருள் நடமாட்டம் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

திமுக ஆட்சியில் மக்களுக்குத் துன்பம் மட்டுமே கிடைப்பதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.