கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

கோவையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், முதியவர்கள் தனியாக வசிப்பது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் போர் பதற்றத்தால் சிக்கியிருந்த இந்தியர்களை மத்திய அரசு பாதுகாப்பாக மீட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், கோவையைச் சேர்ந்த 18 பேர் பத்திரமாகத் திரும்பியதையும் உறுதிப்படுத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், அவை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அவற்றை நிறைவேற்ற “வாய்ப்பில்லை ராஜா” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

விஜய் தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பதால் அந்த வாக்குறுதிகள் சாத்தியப்படாது என்றும், அரசியல் தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். தமிழகத்தில் பாஜக வலுவாக வளர்ந்துவிட்டதாகவும், விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டணி கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.