இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி, திலக் வர்மாவின் தலைமையில் தனது இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. நடப்பு 2026 ஐபிஎல் தொடர் முடிந்ததில் இருந்து இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வரும் வேளையில், இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தொடரில் விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர்களுடன் மைதானத்தில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஓவர் முறையில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, இந்திய வீரர்கள் பெவிலியன் நோக்கி திரும்பிய போது, இலங்கை வீரர்கள் அவர்களை வம்புக்கு இழுத்துள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, அது உடல் ரீதியான தள்ளுமுள்ளாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
If I was India A coach or manager I would have left Vaibhav Suryavanshi out for this game v AFG. Only to let him know that’s it’s not OK to get physical on the field. Whatever the provocations.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) June 17, 2026
இந்திய அணியின் இந்த மோதல் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இடையே விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் தளத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “மைதானத்தில் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, யார் எவ்வளவு சீண்டினாலும் எல்லையை மீறி தள்ளுமுள்ளில் ஈடுபடுவது தவறானது. நான் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால், மைதானத்திற்கு வெளியே சண்டை போடுவது தவறு என்பதை உணர்த்த வைபவ் சூர்யவன்ஷியை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் இருந்து நீக்கி பாடம் புகட்டியிருப்பேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தத் தொடரில் கேப்டன் திலக் வர்மாவும் நடுவர்களின் சர்ச்சை முடிவுகளுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
