கோவையில் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி ஆகிய மூன்று பேர் மீதும் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மிகக் குறுகிய காலமான 126 நாட்களிலேயே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதித்துறையின் அதிரடி நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்றே அறிவிக்கப்பட உள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சரியான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
