கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குட்டிக்கானம் மரியன் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது, கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவி தினஸ்ரீ மேடையில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டு சாகசங்களைச் செய்து காட்டினார்.

மேலும் மாணவியின் திறமையைப் பாராட்டிய ராகுல் காந்தி, அவரோடு இணைந்து பயிற்சி பெற விருப்பம் தெரிவித்தார். பின்னர் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த அவர், மாணவி தினஸ்ரீயுடன் இணைந்து களரிப்பயட்டுவின் அடிப்படை நகர்வுகளை ஆர்வத்துடன் செய்து பார்த்தார். குறிப்பாக, காலை உயர்த்தி கைகளைத் தொடும் பயிற்சியை அவர் செய்த விதம் அங்கிருந்த மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்த நிகழ்வு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “களரிப்பயட்டு என்பது வெறும் தற்காப்புக் கலை மட்டுமல்ல, அது உங்களை நீங்களே கண்டறிய உதவும் ஒரு பயிற்சி. இது அனைத்து தற்காப்புக் கலைகளின் தாய்” என்று புகழாரம் சூட்டினார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோரும் இந்தப் பயிற்சியில் ஈடுபட முயன்றனர்.

இந்நிலையில் “நான் அவ்வளவு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவன் அல்ல” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், மாணவியின் வழிகாட்டுதலில் அவர் மேற்கொண்ட பயிற்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சந்திப்பின் போது அரசியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் கல்வி முறை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.