15 வயதே ஆன இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக எம்பியும், பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். மும்பையில் தனது ‘பாரத் பாக்ய விதாதா’ திரைப்பட விளம்பர நிகழ்ச்சியின் போது பேசிய கங்கனா, “வைபவ் சூர்யவன்ஷிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் நம் நாட்டுக்காக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை விடவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்.

அதேநேரம் இந்த இளம் வீரர் மீது தேவையற்ற அழுத்தத்தை சுமத்த நான் விரும்பவில்லை. அவர் உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நெகிழ்ச்சியோடு கூறினார். இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது முதல் வைபவ் சூர்யவன்ஷி நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், கங்கனாவின் இந்த மாஸான வாழ்த்து வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, தனது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் சிங்கமாகப் பார்க்கப்படும் இவர், இந்த ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்துக்கு எதிராக நடக்கவுள்ள டி20 தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மட்டுமன்றி, விரைவில் தொடங்கவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் வைபவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரங்கில் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியைக் காண ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இப்போதே காத்துக் கொண்டிருக்கின்றனர்.