கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.20 கோடி கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி பரிசு தொடர்பான வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குலுக்கலில் XC 138455 என்ற எண்ணுள்ள சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது.

இந்தச் சீட்டை வைத்திருந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் முறைப்படி லாட்டரி அலுவலகத்தில் அதனை ஒப்படைத்திருந்தார். அதேசமயம், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சஜிமோன் என்பவர், வெற்றி பெற்ற அந்தச் சீட்டு உண்மையில் தனக்குச் சொந்தமானது என்றும், தனது வாகனத்தில் வைத்திருந்தபோது அது காணாமல் போய்விட்டதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மாநில லாட்டரி துறையிடம் அறிக்கை கோரியிருந்தது. லாட்டரி துறையின் அறிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், முறையான ஆதாரங்கள் இல்லாததால் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

மேலும், லாட்டரி சீட்டை நேரில் வைத்துக்கொண்டு உரிமை கோரிய நபரே உண்மையான வெற்றியாளர் என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கே ரூ.20 கோடி பரிசுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. இதன் மூலம் பல மாதங்களாக நீடித்து வந்த இந்த பரிசுத் தொகை சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.