ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

இரு தரப்பிற்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில் ஈரானின் கடற்படைக் கப்பல்களை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் குறிவைத்துத் தாக்கி அழித்து வருகின்றன. இந்தப் போர் பதற்றத்தால் சர்வதேச கடல் வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த மோதலின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ஹோர்முஸ் நீரிணை அருகே சென்று கொண்டிருந்த ஸ்கைலட் என்ற கப்பல் மீது ஈரான் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் ஏற்கனவே ஒரு இந்தியர் உயிரிழந்த நிலையில் கப்பலின் கேப்டன் அஷிஷ் குமார் உள்ளிட்ட இருவர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாயமான அந்த இரண்டு இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.