தென் கொரியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்யமான எஸ்.கே. குழுமத்தின் (SK Group) தலைவர் சேய் டா-வொன் மற்றும் அவரது முன்னாள் மனைவியும், முன்னாள் அதிபர் ரோ டே-வூவின் மகளுமான ரோ சோ-யோங் இடையேயான நீண்டகால விவாகரத்து மற்றும் சொத்துப் பிரிவு வழக்கில்  உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, தலைவர் சேய் டா-வொன் தனது முன்னாள் மனைிக்கு சொத்துப் பங்குப் பரிமாற்றமாக சுமார் 6,200 கோடி இந்திய மதிப்பில்  ரொக்கமாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், சேய் டா-வொன் வைத்துள்ள எஸ்.கே. குழுமப் பங்குகள் தம்பதியரின் திருமண சொத்துகளின் ஒரு பகுதிதான் என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மறுகணக்கீடு செய்த உயர் நீதிமன்றம், முந்தைய தீர்ப்பில் வழங்கப்பட்ட 1.38 டிரில்லியன் வோன் தொகையை இப்போது குறைத்துள்ளது. இருப்பினும், இந்த மாற்றப்பட்ட தொகையும் கூட கீழமை நீதிமன்றம் முதலில் வழங்கிய 66.5 பில்லியன் வோனை விட கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகமாகும். திருமண வாழ்க்கையின் போது சேய் டா-வொன் பெயரில் வாங்கிய பங்குகள் கூட்டுச் சொத்துகள்தாம் என்றும், நிறுவனத்தின் மதிப்பை உயர்த்த சேய் டா-வொன் வணிக முடிவுகளை எடுத்ததுடன், ரோ சோ-யோங் இல்லறத்தை கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது மற்றும் எஸ்.கே. குழுமம் தொடர்பான வெளியக நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பங்களித்துள்ளார் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவது எஸ்.கே. குழுமத்தின் மீதான சேய் டா-வொனின் நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பாதிக்கக்கூடும் என்ற கவலைகளின் அடிப்படையில், ரோ சோ-யோங்குக்கான முழுத் தொகையையும் பங்குகளாக வழங்காமல் ரொக்கமாகவே செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சேய் டா-வொன் தனது எஸ்.கே. பங்குகளைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். ரோ-வின் தந்தையுடன் தொடர்புடைய பழைய நிதி விவகாரங்கள் மற்றும் பங்குகள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணிகளை மறுபரிசீலனை செய்தே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாகரத்து மற்றும் 2 பில்லியன் வோன் ஜீவனாம்சம் தொடர்பான வழக்கு ஏற்கனவே தென் கொரிய உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சொத்துப் பிரிவு விவகாரம் மட்டுமே தற்போது மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், இந்தச் சட்டப் போராட்டம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.