அமேசான் காடுகள் மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் காணப்படும் மனித இறைச்சியை உண்ணும் ‘பிரானா’ (Piranha) மீன்களை, வெறும் ஒரு துண்டு இறைச்சியை வைத்து மீனவர் ஒருவர் வேட்டையாடும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பொதுவாக மீன் பிடிப்பவர்கள் வலைகளைப் பயன்படுத்தியோ அல்லது தூண்டில் மூலமாகவோ மீன் பிடிப்பது வழக்கம். ஆனால், எக்ஸ் தளத்தில் @TansuYegen என்பவரால் பகிரப்பட்ட இந்த 40 வினாடி வீடியோவில், ஒரு மீனவர் மிகவும் ஆபத்தான முறையைக் கையாண்டுள்ளார்.
அவர் ஒரு பெரிய மாமிசத் துண்டை நீருக்குள் காட்டியவுடன், நீருக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான பசி கொண்ட பிரானா மீன்கள் அந்த இறைச்சியைக் கடிக்க வருகின்றன. மீன்கள் இறைச்சியைக் கவ்விப் பிடித்திருக்கும் அந்த நொடியிலேயே, அவற்றை லாவகமாக ஒரு கூடையில் அள்ளி விடுகிறார் அந்த மீனவர்.

இந்த வீடியோவை இதுவரை 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தவறுதலாக யாராவது அந்த தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும்?” என்று ஒருவர் அச்சத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொருவரோ, “வெறும் பச்சை இறைச்சியை வைத்து இவ்வளவு மீன்களைப் பிடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். மேலும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்கள், தங்களின் உணவுத் தேவைக்காக இந்த முறையிலேயே பிரானா மீன்களைப் பிடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.