ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முற்றி வரும் போர் பதற்றம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால், அது மத்திய கிழக்கின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் கட்டமைப்பையும் நிலைகுலையச் செய்யும் என அஞ்சப்படுகிறது.
இந்த நாடுகள் ஈரானுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், போர் வெடித்தால் எண்ணெய் கிணறுகள், முக்கியத் துறைமுகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் என அனைத்தும் நேரடியாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், “இனி அங்கு அமைதியாக வாழ முடியாது” என்கிற சூழல் உருவாகிவிடுமோ என்ற கவலை அந்நாடுகளில் வாழும் மக்களிடமும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமும் அதிகரித்துள்ளது.
மேலும் மறுபுறம், ஒருவேளை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் அல்லது ஈரான் தனது பதிலடித் தாக்குதலை வளைகுடா நாடுகளின் மீது திருப்பினால், உலகளாவிய எரிபொருள் விநியோகம் முற்றிலுமாகத் தடைபடும். இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்வதுடன், அரபு நாடுகளின் பல தசாப்த கால வளர்ச்சியைச் சிதைத்துவிடும்.
இந்நிலையில் “இது மட்டும் நடந்துவிடக்கூடாது” என அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஒருபுறம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், ஈரானின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தற்போது உலக நாடுகளின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
