ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 72 மணிநேரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில், தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் மாரியாய் பொழிந்தன.

இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் கடுமையாகச் சிதைத்துள்ளன.

இந்த மோதலால் உலகின் முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், உலக சந்தையில் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

பிரான்ஸ், பிரிட்டன், கிரீஸ் போன்ற நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் ஏற்கனவே தங்கள் போர்க்கப்பல்களை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளதால், இந்தப் போர் ஒரு உலகளாவிய மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 181 குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தரைப்படை வீரர்களை அனுப்பவும் தயங்கமாட்டோம் என எச்சரித்துள்ளது உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.