தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒருவழியாக நேற்று (மார்ச் 4) முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரசுக்கு மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021 தேர்தலை விட இந்த முறை காங்கிரசுக்குக் கூடுதலாக 3 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) இடமும் காங்கிரசுக்கு ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த முக்கிய முடிவைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். காங்கிரஸ் தரப்பில் அகில இந்திய தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சட்டமன்றத் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்தத் தொகுதிப் பங்கீடு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.