நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சி, வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி அமைத்துள்ளது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய கருணாஸ், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வந்த கருணாஸ், திமுக மேடைகளில் தொடர்ந்து பேசி வந்த நிலையில், தற்போது இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே தனது கட்சி போட்டியிடும் என்றும், வேட்பாளராகத் தாமே களம் இறங்கப் போவதாகவும் அறிவித்தார்.

தங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவிடம் வழங்கியுள்ளதாகவும், விரைவில் தொகுதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2016-ல் அதிமுக கூட்டணியில் வென்ற கருணாஸ், தற்போது முழுமையாக திமுக பக்கம் சாய்ந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்கிறார்.