கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகே இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதே இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நடப்பதற்குக் காரணம் என்றும், குற்றவாளிகளுக்குப் புகலிடம் தரும் வகையில் திமுக அரசு செயல்படுவதாகவும் அவர் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 சதவீதமும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
“நிர்வாகிகள் தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறுவேன்” என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், தற்போது மௌனமாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் தற்போது பெண்களுக்கு நரகமாக மாறிவிட்டதாகவும், இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
