ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து வருவதால், எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தியர்கள் யாரும் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், தூதரகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர உதவிகளுக்காக +989128109115 உட்பட நான்கு உதவி எண்களையும், மின்னஞ்சல் முகவரியையும் தூதரகம் அறிவித்துள்ளது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.