கேரள மாநிலம் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆலப்புழா புன்னபுரா பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தியோரு வயதான உஷா ஜோசப் என்பவர் கடந்த 2021 ஆண்டு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அன்றிலிருந்து அவருக்குத் தொடர்ச்சியாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.
அண்மையில் அவருக்குச் சிறுநீரில் ரத்தம் வெளியேறியதால் சிறுநீரக மருத்துவரை அணுகி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அவரது வயிற்றில் பத்து சென்டிமீட்டர் நீளமுள்ள அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்துப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அரசு மருத்துவர்கள் ரகசியம் காக்குமாறு கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே அந்தப் பெண்ணின் அறுவை சிகிச்சைக்கான முழுச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் இதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளாக ஒரு பெண் தனது வயிற்றில் கத்தரிக்கோலுடன் வலியால் துடித்த இந்தச் சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மருத்துவத்துறையின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் மக்களிடையே அதிகரித்துள்ளது.
