டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் அவனது சொந்த சித்தியாலேயே கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த ஹாதி என்ற அந்த சிறுவன், தனது தாயுடன் முகர்ஜி நகரில் உள்ள மாமா வீட்டிற்கு வந்திருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அவனது சித்தி ஆஜ்ரா (30) கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை அப்பகுதி மக்கள் பார்த்தபோது, உயிரிழந்த சிறுவனின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணிடமிருந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலேயே ஆஜ்ராவை கைது செய்த போலீசார், எதற்காக இந்த கொலையை அவர் செய்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூங்காவில் வேலை செய்த தோட்டக்காரர் இந்தப் பெண் சிறுவனைத் தாக்குவதைக் கண்டு சத்தம் போட்டதாலேயே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. குடும்பப் பகையா அல்லது மனநலப் பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.